மேக்னசைட் சுரங்கத்தை திறக்கக்கோரி சேலத்தில் தொழிலாளர்கள் சாலைமறியல்


மேக்னசைட் சுரங்கத்தை திறக்கக்கோரி சேலத்தில் தொழிலாளர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 9 Sept 2021 2:53 AM IST (Updated: 9 Sept 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே உள்ள மேக்னசைட் சுரங்கத்தை திறக்கக்கோரி அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்
சாலை மறியல்
சேலம் அருகே மாமாங்கம் பகுதியில் மேக்னசைட் சுரங்கம் செயல்பட்டு வந்தது. இங்கு செயில் கம்பெனிக்கு தேவையான மூலப்பொருட்களான வெள்ளைக்கல் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறி செயல்பட்டதாக கூறி ரூ.45 கோடி அபராதம் விதித்து இந்த சுரங்கம் மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய சுமார் ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் தற்போது வேலையிழந்து வறுமையில் உள்ளனர்.
இதையடுத்து அபராத தொகை ரூ.45 கோடியை செலுத்தி மேக்னசைட் சுரங்கத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று சேலம் மாவட்ட மேக்னசைட் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சேலம்-பெங்களூரு மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பாட்டாளி மேக்னசைட் தொழிற்சங்க பொதுச்செயலாளர் சதாசிவம், மேக்னசைட் தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன் உள்பட நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மூடப்பட்ட மேக்னசைட் சுரங்கத்தை திறக்கக்கோரி கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த  சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜ், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், சுரங்கத்தை திறக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறும் போது, ‘அபராத தொகையை செலுத்தி சுரங்கத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளும், செயில் நிர்வாகமும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சுரங்கத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதங்களாக கேட்டு வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே சுரங்கத்தை திறக்காவிட்டால் அடுத்தகட்டமாக கலெக்டர் அலுவலகம் அருகே மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.


Next Story