பொது இடங்களில் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அனுமதி கிடையாது சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவிப்பு
பொது இடங்களில் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய கட்டுப்பாடுகள்
சேலம் மாவட்டத்தில் வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தவும், சேலம் மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
பொது இடங்களில்
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை வைப்பதற்கு அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி கிடையாது. அது போன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், அனுமதி இல்லாத நிலையில், இந்த சமய விழாக்களை பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. எனவே, அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும், அமைப்புகள் இந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தவிர்க்கப்பட வேண்டும்.
வீடுகளில் வழிபாடு
தனி நபர்கள், தங்களது வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சிலைகளை பின்னர் முறையாக கொண்டு செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எந்த வகையிலும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விழாவிற்காக பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறாமல் முககவசம் அணிவதோடு, பொருட்கள் வாங்க நிற்கும் போதும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முழு ஒத்துழைப்பு
இந்த வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்குமாறும், இந்த விழா கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் அனைவரும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story