சேலம் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு 50 அடி உயரத்துக்கு பீறிட்டு வெளியேறிய தண்ணீர்
சேலம் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 50 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வீணாகியது.
ஆட்டையாம்பட்டி,
குடிநீர் குழாய் உடைப்பு
சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து தலைவாசல் கால்நடை பூங்கா பகுதிக்கு ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி வழியாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் சாலையோரம் பதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2½ அடி அளவுள்ள இரும்பு குழாய் மூலம் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த குழாய் பாதையில் குடிநீர் சரியாக செல்கிறதா என்பதை அறிய சோதனை ஓட்டம் நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில், எஸ்.பாப்பாரப்பட்டி சின்னுசாமி கவுண்டர் தெருவில் அமைந்துள்ள பாதையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தரையில் நீரூற்று ஏற்பட்டது போன்று, சுமார் 50 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் வானத்தை நோக்கி பீறிட்டது.
மின்சாரம் நிறுத்தம்
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மின்சார வாரியத்துக்கும், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வால்வை அடைத்தனர். இதனால், சாலையோரம் இருந்த மின்சார வயரில் தண்ணீர் பாயாதவாறு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் குழாயில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எரிமலைக்குழம்பு போன்று தண்ணீர் பீறிட்டு வெளியேறி கொண்டே இருந்தது. முதலில் 50 அடி உயரம் வரை சென்ற தண்ணீர், அதன்பிறகு படிப்படியாக குறைந்து நின்று விட்டது.
2-வது முறை
இருப்பினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பூமியில் இருந்து பீறிட்டு கீழ் இருந்து மேல் நோக்கி தண்ணீர் வெளியேறிய காட்சியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி நடந்தது.
இதேபோல் நேற்று முன்தினமும் இருசனாம்பட்டி பகுதியிலும் சோதனை ஓட்டத்தின் போது தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது குறிப்பிடத்தக்கது. நேற்று 2-வது முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதால் குடிநீர் வீணாவதை தடுக்க சோதனை ஓட்டத்தின் போது அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story