150 தெருநாய்களை உயிருடன் மண்ணில் புதைத்து கொன்ற கொடூரம்
சிவமொக்கா அருகே, வனப்பகுதியில் 150 தெரு நாய்களை உயிருடன் மண்ணில் புதைத்து கொன்ற கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவமொக்கா: சிவமொக்கா அருகே, வனப்பகுதியில் 150 தெரு நாய்களை உயிருடன் மண்ணில் புதைத்து கொன்ற கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெருநாய்கள் மாயம்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா கம்பதாளா-ஒசூர் அருகே உள்ளது தம்மடிஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் இருந்தன. அந்த கிராமத்திற்கு புதிதாக யாராவது வந்தால், அவர்களை பார்த்து நாய்கள் குரைப்பது வழக்கம். நாய்கள் குரைத்தாலே கிராமத்திற்கு யாரோ புதிதாக வந்து உள்ளனர் என்று கிராம மக்களுக்கு தெரிய வந்து விடும்.
இந்த நிலையில் தம்மடிஹள்ளி கிராமத்தில் உள்ள மைசூரு காகித தொழிற்சாலைக்கு வெளியூர் பெண்கள் வேலைக்கு வந்தனர். அவர்களை பார்த்து தெருநாய்கள் குரைத்து கொண்டு இருந்தன. சிறிது நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் நின்று போனது. மேலும் கிராமத்தில் இருந்த தெருநாய்களும் தொடர்ந்து மாயமாகி வந்தன.
மண்ணில் புதைத்து....
இந்த நிலையில் கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் ஏராளமான நாய்கள் மலக்கழிவுகள் கிடந்தன. இதனால் வனப்பகுதியில் சென்று கிராம மக்கள் பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி மூடப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் அங்கு கிராம மக்கள் குழிதோண்டி பார்த்தனர். அப்போது குழிக்குள் 150-க்கும் மேற்பட்ட நாய்கள் செத்து கிடந்தன.
மேலும் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றமும் வீசியது. இதுபற்றி கிராம மக்கள், பத்ராவதி புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 150 நாய்களையும் மர்மநபர்கள் மண்ணில் புதைத்து கொன்றது தெரியவந்தது.
தீவிர விசாரணை
ஆனால் நாய்களை கொன்றது யார் என்பது உடனடியாக தெரியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருக்களில் சுற்றிதிரியும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய சிலர் டெண்டர் எடுத்து இருந்தனர். அவர்கள் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல், நாய்களை உயிருடன் மண்ணில் புதைத்து கொன்று இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது.
மேலும் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கிராம பஞ்சாயத்து ஊழியர்களே விஷம் வைத்து தெருநாய்களை கொன்று புதைத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. தெருநாய்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டது குறித்து விலங்குகள் நல அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில், பத்ராவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுகுறித்து கிராம பஞ்சாயத்து ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவமொக்கா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story