ரூ.11 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; 4 பேர் கைது


ரூ.11 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sept 2021 3:00 AM IST (Updated: 9 Sept 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.11 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.11 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமிங்கல வாந்தி

பெங்களூரு சிக்கஜாலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கங்காநகர் அருகே வி.ஐ.டி. ரோட்டில் மர்மபொருளை விற்பனை செய்ய சிலர் முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சிக்கஜாலா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக 4 பேர் சுற்றி திரிந்தனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

 மேலும் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை நடத்தப்பட்டது.
அந்த பையில் ஒரு மர்ம பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த பொருள் பற்றி போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அது திமிங்கல உமிழ்நீர் (ஆம்பர் கிரீஷ்) என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை விற்பனை செய்ய 4 பேரும் முயற்சி செய்ததால், அவர்களை போலீசார் கைது செய்தார்கள்.

ரூ.11 கோடி மதிப்பு

அவர்கள் 4 பேரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து திமிங்கல உமிழ்நீரை வாங்கி வந்து, அவற்றை ஒரு தொழில்அதிபருக்கு விற்பனை செய்ய 4 பேரும் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. திமிங்கல உமிழ்நீர் கிடைப்பது மிகவும் அபூர்வமாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை கொடுத்தது யார்?, எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்து 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான 4 பேரிடம் இருந்து 11 கிலோ எடை உள்ள திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  சர்வதேச சந்தையில் ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீரின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதையடுத்து, மீட்கப்பட்ட திமிங்கல உமிழ்நீரின் மதிப்பு ரூ.11 கோடிக்கு மேல் இருக்கும் என்று சிக்கஜாலா போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேர் மீதும் சிக்கஜாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story