சாலையில் கற்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


சாலையில் கற்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2021 6:22 AM IST (Updated: 9 Sept 2021 6:22 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூரில் பெய்த பலத்த மழையால் சாலையில் கற்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பந்தலூர்

கூடலூர், பந்தலூரில் பெய்த பலத்த மழையால் சாலையில் கற்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பலத்த மழை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பந்தலூர், தேவாலா, உப்பட்டி, பொன்னானி, கரியசோலை, நெலாக்கோட்டை, பிதிர்காடு, பாட்டவயல், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, எருமாடு, சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. 

இதனால் பந்தலூரில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் நீர்மட்டம் பகுதியில் கற்கள் உருண்டு விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து, கற்களை அகற்றினர். இதனால் சிறிது நேரம் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கால்வாயில் உடைப்பு

இதேபோன்று பந்தலூர் பஜாரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையை வெள்ளம் சூழ்ந்தது. வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி சென்றன. கூடலூரில் பெய்து வரும் மழையால் சில இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நாடுகாணியில் பலத்த மழையால் நேற்று மாலை 4 மணிக்கு வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தேவாலா அட்டியில் இருந்து வாழமூலா பகுதியில் உள்ள பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. மேலும் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.


Next Story