தவறாக பேசியதால் வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கடலில் வீசிய நண்பர்


தவறாக பேசியதால் வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கடலில் வீசிய நண்பர்
x
தினத்தந்தி 9 Sept 2021 6:52 AM IST (Updated: 9 Sept 2021 6:52 AM IST)
t-max-icont-min-icon

தன்னைப்பற்றி தவறாக பேசியதால் ஆத்திரத்தில் வாலிபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவரது உடலை கடலில் வீசிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

மாயமானவர் பிணமாக மீட்பு
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 24). இவர், கடந்த 4-ந்தேதி இரவு முதல் திடீரென்று காணாமல் போய்விட்டதாக அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் இவரது தாயார் பஞ்சவர்ணம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் ஆண் ஒருவரின் பிணம் கரை ஒதுங்கி இருப்பதாக அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பிணத்தை பார்த்த பஞ்சவர்ணம், அது மாயமான தனது மகன் மகேஷ்வரனின் உடல்தான் என்று அடையாளம் காட்டினார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வெட்டிக்கொலை
மகேஷ்வரனின் உடலில் வெட்டு காயங்கள் காணப்பட்டது. எனவே யாரோ மர்மநபர் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து, பிணத்தை கடலில் வீசி இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். மகேஷ்வரன் காணாமல் போன இரவு, அவரது நண்பர் கார்த்திக் (24) என்பவருடன் வெளியில் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் தலைமறைவாகி விட்டார். இதனால் கார்த்திக்தான், மகேஷ்வரனை கொலை செய்து, உடலை கடலில் வீசி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். கார்த்திக் நேற்று கைது செய்யப்பட்டார்.

நான்தான் கொன்றேன்....
கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “மகேஷ்வரனும், நானும் சம்பவத்தன்று இரவு மது அருந்தினோம். போதை மயக்கத்தில் நடந்த சண்டையில் மகேஷ்வரனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து பிணத்தை, பட்டினப்பாக்கம் கடல் முகத்துவாரத்தில் வீசி விட்டதாக” போலீசாரிடம் அவர் தெரிவித்தார். தன்னைப்பற்றி மகேஷ்வரன் தவறாக பேசியதால், தனக்குள் வெறி ஏற்பட்டு அவரை படுகொலை செய்து விட்டதாகவும், போலீசாரிடம் கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் அபிராமபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கார்த்திக் மீது அபிராமபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story