திருவள்ளூர் பஸ் நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி


திருவள்ளூர் பஸ் நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 9 Sep 2021 8:24 AM GMT (Updated: 9 Sep 2021 8:24 AM GMT)

பராமரிப்பு பணி காரணமாக முன் அறிவிப்பின்றி திருவள்ளூர் பஸ் நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

திருவள்ளூர் பஸ் நிலையம்
மாவட்டத் தலைநகராக விளங்கும் திருவள்ளூர் பஸ் நிலையத்திலிருந்து தினந்தோறும் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, பூந்தமல்லி, காஞ்சீபுரம், வேலூர், ஸ்ரீபெரும்புதூர், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ், தனியார் பஸ் என 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக எந்நேரமும் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் அரசு அதிகாரிகளின் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திருவள்ளூர் பஸ் நிலையத்தில் உள்ள இரண்டு நுழைவு வாயில்களையும் மரக்கட்டைகளால் அடைத்து பஸ்கள் உள்ளே செல்ல முடியாதவாறு திருவள்ளூர் பஸ் நிலையத்தை மூடினார்கள்.

அதை தொடர்ந்து பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றது. ஆனால் பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதற்காக அதிகாரிகள் பொதுமக்களுக்கு எந்த முன்னறிவிப்பும் அறிவிக்காமல் விட்டனர்.

போக்குவரத்து நெரிசல்
இதை தொடர்ந்து நேற்று காலையில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கினர். இதன் காரணமாக திருவள்ளூர் பஸ் நிறுத்தத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இதன் காரணமாக அந்த வழியாக வந்த நான்கு சக்கர மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள், அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். இதன் எதிரொலியாக திருவள்ளூர் சி.வி. நாயுடு சாலை, காமராஜர் சாலை, காக்களூர் சாலை, செங்குன்றம் சாலை, தேரடி போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிகாரிகள் மாற்று நிறுத்தம் மாற்று ஏற்பாடு செய்யாமல் விட்டதால் திருவள்ளூரில் இருந்து எந்த பஸ் எங்கே செல்கிறது என்று தெரியாமல் பயணிகள் தவித்ததை காண முடிந்தது.


Next Story