தூத்துக்குடி மாவட்டத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில்  50 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 9 Sep 2021 12:48 PM GMT (Updated: 9 Sep 2021 12:48 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
பனைவிதை நடவு
கோவில்பட்டியை அடுத்து உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் பனைவிதை நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முதல் பனை விதையை விதைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் அமுதா, மணிகண்டன், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன், நகரசபை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, வில்லிசேரி எலுமிச்சை விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார், மானாவாரி விவசாயிகள் சங்க தலைவர் மாரியப்பன், தமிழக விவசாயிகள் சங்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:- 
பனைமரத்தின் பயன்கள்
ஆலம்பட்டி கண்மாயில் 10 ஆயிரம் பனை விதைகள் இன்று(நேற்று) விதைக்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடக்கும். கோவில்பட்டி தாலுகாவில் இந்த பருவ சீசனில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பனை மரமானது மாநில மரமாகும். தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்கள் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடியே 50 லட்சம் மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் பலருக்கும் வாழ்வாதாரமாக இருக்கின்றன. பனை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன் அளிக்கிறது. பனை ஓலையில் இருந்து கூடை மற்றும் அலங்கார பொருட்கள் செய்யப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்துக்கு நுங்கு, பதநீர் பயன்படுகிறது. கட்டிட பணிகளுக்கு மரத்தடிகள் உபயோகப்படுகிறது.
50 லட்சம் விதைகள்
பாரம்பரிய சின்னமாக விளங்கும் பனைமரங்கள் பாதுகாக்கப்படவேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பருவத்தில் மட்டும் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப் பட்டு இருக்கிறது. வனத்துறையுடன் சேர்ந்து பனை மரங்களை பாதுகாக்கவும், கணக்கீடு செய்யவும் கிரீன் கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது. இந்த கமிட்டியினர் பனை மரங்களை கணக்கீடு செய்து, அதிகபடியாக பனை விதைகளை நடவு செய்யவும், மக்களிடையே விழிப்புணர்வு செய்யவும் முயற்சி செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story