கோவையில் 1000 போலீசார் பாதுகாப்பு
கோவையில் 1000 போலீசார் பாதுகாப்பு
கோவை
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் இதனை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவோம் என்று இந்து அமைப்புகள் அறிவித்து உள்ளன. இதன்காரணமாக சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க போலீசார் மாநகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் அரசின் உத்தரவை மீறி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவில்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட எதுவும் தடை விதிக்கப்படவில்லை. அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது. எனவே இந்து அமைப்பினர் யாராவது பொதுஇடங்களில் சிலைகள் வைத்து வழிபடுகிறார்களா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சிலைகளை கரைக்க ஏற்பாடு
பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிலைகளை ஊர்வலமாகவோ அல்லது கூட்டமாகவோ நீர்நிலைகளுக்கு எடுத்து வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குளங்களில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிலைகள் கரைக்கப்படும். பொதுமக்கள் குளத்திற்குள் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் மாநகரில் முக்கிய இடங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை அகற்ற ஒவ்வொரு போலீ்ஸ் நிலையத்திலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் போலீசார், வருவாய், மாநகராட்சி ஊழியர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் பொது இடங்களில் தடையை மீறி வைக்கப்படும் சிலைகளை அகற்றி இந்து சமய அறநிலைய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் கூட்டம்
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க கோவை ரங்கே கவுடர் வீதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. பலர் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக வலம் வந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
பூ மார்க்கெட்டில் ஒரு கட்டு மா இலை ஒரு கட்டு ரூ.20, வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.30 வரையும், அருகம்புல் ஒரு கட்டு ரூ.20, எலுமிச்சை பழம் ஒன்று ரூ.5, தேங்காய் ஒன்று ரூ.25 முதல் ரூ.35 வரையும், துளசி ரூ.20-க்கும் விற்பனையானது. மேலும் ஆப்பிள் கிலோ ரூ.100 முதல் ரூ.140, மாதுளை ரூ.120 முதல் ரூ.200, திராட்சை பழம் ரூ.120 என விற்கப்பட்டது.
இதுதவிர விநாயகர் சிலைக்கு வைக்கப்படும் குடை, அலங்கார மாலைகளும் விலை உயர்ந்து காணப்பட்டன. சிறிய விநாயகர் சிலைகள் ரூ.150 முதல் ரூ.1000 வரை விற்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் காரணமாக பூ மார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story