வேலூரில் வேன் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பலி


வேலூரில் வேன் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 9 Sep 2021 4:30 PM GMT (Updated: 2021-09-09T22:00:33+05:30)

வேலூர் காகிதப்பட்டறையில் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த என்ஜினீயர் வேனின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர்

வேலூர் காகிதப்பட்டறையில் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த என்ஜினீயர் வேனின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையின் குறுக்கே வந்த நாய்

அணைக்கட்டு தாலுகா ஊனைபள்ளத்தூரை சேர்ந்தவர் குருநாதன் (வயது 33), என்ஜினீயர். இவருடைய மனைவி நந்தினி, வேலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குருநாதன் வேலூர் தொரப்பாடி எழில்நகரில் தங்கி, சத்துவாச்சாரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை சத்துவாச்சாரியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக வேலூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் குருநாதன் சென்று கொண்டிருந்தார். காகிதப்பட்டறையில் உள்ள பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென நாய் சென்றது. அதனால் அதன்மீது மோதாமல் இருக்க உடனடியாக அவர் பிரேக் பிடித்தார்.

என்ஜினீயர் பலி

அப்போது நிலைதடுமாறிய குருநாதன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேனின் சக்கரத்தில் சிக்கினார்.. இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story