வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.
ஊட்டி,
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.
நிபா வைரஸ் பரவும் விதம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நிபா வைரஸ் பரவல்
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் மூலம் நோயை உண்டாக்கும் அந்த வைரஸ் பெருக்கம் அடைகிறது. இந்த நோய் மூளை காய்ச்சலுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவு இழத்தல், மனக்குழப்பம் மற்றும் மரணம் ஏற்படுத்தலாம். தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.
உடனே காய்ச்சல் மற்றும் மூளை அழற்சி நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும். மேலும் ரத்த மாதிரிகளை பரிசோதித்து கண்டறியலாம். காய்கறி மற்றும் பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது.
தனி அறையில் வைத்து...
பன்றிகளை குடியிருப்பு பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். நோய்வாய்ப்பட்ட பன்றிகள் காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் டாக்டரை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் அபாயம் உள்ளதால் பாதிக்கப்பட்ட நபர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
‘நெகட்டிவ்’ சான்றிதழ்
நிபா வைரஸ் தாக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் தொற்று பதிவாகும் நபர்களோடு முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு இருப்பதன் மூலமாக பரவுகிறது.
எனவே தடுப்பு நடவடிக்கையாக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்தாலும், நீலகிரியை சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தாலும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, ‘நெகட்டிவ்’ சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story