வி.மருதூர் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்


வி.மருதூர் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 5:21 PM GMT (Updated: 9 Sep 2021 5:21 PM GMT)

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு வி.மருதூர் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் வி.மருதூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் அந்த ஏரியை சரிசெய்து நிரந்தரமாக நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்வதே தற்போது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அங்கு ரூ.50 கோடி செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கழிவுநீர் கால்வாய் நிலையம் அமைக்கப்பட்ட இடங்களான காகுப்பம் ஏரி, எருமணந்தாங்கல் ஏரி போன்ற நீர்நிலைகள் கழிவுநீரால் மாசுபடுத்தப்பட்டுள்ளது, அதே நிலை வி.மருதூர் ஏரிக்கும் வர வேண்டாம். இந்த ஏரியில் கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு செய்தால் விழுப்புரம் பகுதி மக்களுக்கு கடுமையாக நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இத்திட்டத்திற்கான நிதியை வி.மருதூர் ஏரி அதன் வரத்து கால்வாயை சரிசெய்ய பயன்படுத்துமாறு அப்பகுதி மக்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட இயற்கை மீட்பு மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் வி.மருதூர் ஏரியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் கைவிடப்படவில்லை.

பொதுமக்கள் போராட்டம்

இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வி.மருதூர் ஏரிக்கு திரண்டு சென்று திடீர் போராட்டம் செய்தனர். வி.மருதூர் ஏரி மீட்பு கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் அகிலன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் நாராயணன், மோகன், சதீஷ், சிவகுரு, பாபு, நத்தர்ஷா, சிகாமணி, பாண்டியன், அய்யப்பன், செந்தில் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு வி.மருதூர் ஏரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும், ஏரியின் வரத்து வாய்க்காலை சீர்செய்து ஏரியில் தண்ணீர் நிரப்ப தேவையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்குழுவினர் கூறுகையில், நீர்பிடிப்பு பகுதியில் எந்தவிதமான கட்டமைப்புகளும் கட்டக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நடைபெற்று வரும் இப்பணியை தடுத்து நிறுத்தி ஏரியை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதை கேட்டறிந்த அதிகாரிகள், ஏரியில் நடைபெற்று வரும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story