கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு


கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 9 Sept 2021 10:54 PM IST (Updated: 9 Sept 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்து கலெக்டர் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது பாதுகாப்பான பயணம் மேற்கொள்கிறார்களா? என்பது குறித்து நேற்று மாலை மாவட்ட கலெக்டர் டி.மோகன், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், மாணவர்கள் மத்தியில் பேசும்போது, பஸ்களில் மாணவர்கள் கூட்டநெரிசலில் பயணம் மேற்கொள்ளக்கூடாது. கொரோனா தாக்கம் குறையாத சூழலில் பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றியே பயணம் செய்ய வேண்டும். பள்ளிக்கு வந்து மீண்டும் மாலையில் வீடு திரும்பும் வரை முகக்கவசத்தை கழற்றக்கூடாது. கட்டாயம் சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக மாணவர்கள் மாலை வேளையில் பள்ளி முடிந்து வீடு செல்லும்போது பஸ்கள் இல்லை என்று நினைத்து கூட்டநெரிசலில் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யக்கூடாது, பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். அதற்காக மாணவர்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவுரை கூறினார்.

கூடுதல் பஸ்கள்

இதனை தொடர்ந்து மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பஸ்களில் பள்ளி மாணவர்கள் மட்டும் என்று பலகை வைக்கப்பட்டு இயக்கப்பட்டன. அதில் இருக்கைகளில் மட்டும் மாணவர்கள் முக கவசம் அணிந்தபடி பயணம் செய்யவும், நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த நடைமுறைகளை அனைத்து பஸ்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் செல்வன், துணை மேலாளர் (வணிகம்) துரைசாமி, தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story