தரங்கம்பாடி மீனவர்களின் விசைப்படகு மீட்பு
திசைமாறி சென்றதால் ஆந்திர மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட தரங்கம்பாடி மீனவர்களின் விசைப்படகு 2 மாதமாக போராடி மீனவ பஞ்சாயத்தார் மீட்டு வந்தனர்.
பொறையாறு:
திசைமாறி சென்றதால் ஆந்திர மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட
தரங்கம்பாடி மீனவர்களின் விசைப்படகு 2 மாதமாக போராடி மீனவ பஞ்சாயத்தார் மீட்டு வந்தனர்.
திசைமாறி ஆந்திராவுக்கு சென்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது39). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8 பேருடன் கடந்த ஜூலை 12-ந்தேதி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப்படகில் சென்றார்.
இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி பழுதடைந்துள்ளது. இதனால் திசைமாறி ஆந்திர கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகை தரங்கம்பாடி மீனவர்களுடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிறைப்பிடித்தனர்
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள், மீன்வளத்துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆந்திர மாநிலத்திற்கு சென்று, மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தரங்கம்பாடி மீனவர்கள் 9 பேரை மீட்டு வந்தனர். ஆனால் பறிமுதல் செய்த படகினை விடுவிக்க மறுத்த ஆந்திர மீனவர்கள் கிருஷ்ணாம்பட்டினத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில் படகை நிறுத்தி வைத்திருந்தனர்.
இதையடுத்து தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தார் விசைப்படகை மீட்டு தர வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
2 மாதத்துக்கு பிறகு விசைப்படகு மீட்பு
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி மீண்டும் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார், ஆந்திரா சென்று மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை விசைப்படகை மீட்டு தரங்கம்பாடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் படகில் வைத்திருந்த வலைகள், பேட்டரி, டீசல் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் ஆந்திர மீனவர்கள் எடுத்துக் கொண்டதாக தரங்கம்பாடி மீனவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மீனவருக்கு இழப்பீட்டு தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story