மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலம்


மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலம்
x
தினத்தந்தி 9 Sept 2021 11:30 PM IST (Updated: 9 Sept 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

திருக்குவளை அருகே, மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. சில்மிஷத்தில் ஈடுபட்ட போது சத்தமிட்டதால் கல்லால் தாக்கி கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி:
திருக்குவளை அருகே, மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. சில்மிஷத்தில் ஈடுபட்ட போது சத்தமிட்டதால் கல்லால் தாக்கி கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி அம்பிகா (வயது62). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஊர், ஊராக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த  திருக்குவளை அருகே நத்தப்பள்ளம் பகுதியில் தங்கி யாசகம் பெற்று வந்துள்ளார். இவர் நத்தப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இரவு நேரத்தில் தங்கியிருப்பது வழக்கம்.
மர்ம சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அம்பிகா தலையில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகா கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வந்தனர்.
கல்லால் தாக்கி கொலை
இதுதொடர்பாக நத்தப்பள்ளம் வடக்குத்தெருவை சேர்ந்த சீனிவாசன் (65) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்பிகாவை கல்லால் தாக்கி கொலை செய்ததை  அவர் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.
இதையடுத்து அம்பிகாவை கொலை செய்தது பற்றி சீனிவாசன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:- 
சில்மிஷம்
நத்தப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள இடத்தில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு அம்பிகா தூங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சீனிவாசன், தூங்கி கொண்டிருந்த அம்பிகாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் அருகில் கிடந்த கல்லை எடுத்து அம்பிகா தலையில் தாக்கி உள்ளார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியதால் அச்சம் அடைந்த சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story