கரூரில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்


கரூரில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Sept 2021 12:09 AM IST (Updated: 10 Sept 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் வருகிற 12-ந் தேதி 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக 540 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

கரூர்,
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், பொது சுகாதார இணை இயக்குனர் ஞானக்கன் பிரேம் நிவாஸ், கரூர் மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
கூட்டத்துக்கு பிறகு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வருகிற 12-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 30 முதல் 35 லட்சம் பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் 416 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி பகுதியில் 50 இடங்களிலும், குளித்தலை நகராட்சி பகுதியில் 15 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் தலா 2 அல்லது 3 முகாம்கள் என மொத்தம் 540 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இதில், 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 
47 சதவீத மக்கள்
கரூர் மாவட்டத்தில் இதுவரை 47 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10 சதவீத பேருக்கு 2 தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைவரும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு முகாமிலும் ஒரு தடுப்பூசி செலுத்துபவர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருப்பார்கள். தடுப்பூசி போடும் நபர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய 200 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணியில் இருப்பார்கள்.
பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த முகாமினை ஒரு வெற்றி இயக்கமாக மாற்றி கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story