கந்தர்வகோட்டை, அறந்தாங்கியில் மேலும் 2 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று
கந்தர்வகோட்டை, அறந்தாங்கியில் மேலும் 2 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கந்தர்வகோட்டை:
அரசு பெண்கள் பள்ளி
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பின் கடந்த 1-ந்தேதி முதல் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில், கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 6-ந்தேதி பள்ளிக்கு வந்தார். அப்போது அவர் தனக்கு உடல் சோர்வாக இருப்பதாக ஆசிரியர்களிடம் கூறினார். பின்னர் ஆசிரியர்கள் உடனடியாக அவரை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு சென்றவுடன் அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை தொடர்ந்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவிக்கு தொற்று
தொடர்ந்து அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதைதொடர்ந்து பள்ளி வகுப்பறையில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டது. அந்த மாணவியின் வகுப்பிலுள்ள மாணவிகள் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள ஆசிரியர்கள் உள்பட 30 பேருக்கு நேற்று கொரோனா சோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது.
அறந்தாங்கி
அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசின் உத்தரவு படி தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்த மாணவிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடன் படித்த மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம்
கீரமங்கலம் அருகே குளமங்கலம் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் என சுமார் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவன் படித்த வகுப்பிற்கு மட்டும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. மற்ற வகுப்புகளுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 20-க்கும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு சென்றுள்ளனர். மற்ற மாணவர்களை கொரோனா அச்சத்தின் காரணமாக மாணவர்களின் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. அதனால் வகுப்புகள் குறைவான மாணவர்களுடன் நடந்தது. நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story