கடலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்


கடலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
x
தினத்தந்தி 9 Sep 2021 7:05 PM GMT (Updated: 2021-09-10T00:35:52+05:30)

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்திட முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

909 இடங்களில் மையம்

கொரோனா தடுப்பூசி முகாமை துரிதப்படுத்த, மாநிலம் முழுவதும் ஒரே நாளில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விடுபட்ட தகுதியானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்தவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 909 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

இந்த மாபெரும் முகாமில் மருத்துவத்துறையுடன் வருவாய்த்துறை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கல்வித்துறை, சத்துணவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, காவல்துறை போன்ற அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதோடு, கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் இணை நோய் கண்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இத்தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

8 குழுக்கள் அமைப்பு

மது, மாமிசம் உண்பவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் முன்வந்து தாமாகவே தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி முகாம் எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்திட அனைத்து வட்டங்களிலும் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, வட்டார வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்பார்வையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், சப்-கலெக்டர்கள் மதுபாலன், அமித்குமார், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story