கடலூர் அருகே விதை நெல் பண்ணையை குப்பை கிடங்காக மாற்றுவதற்கு எதிர்ப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


கடலூர் அருகே விதை நெல் பண்ணையை குப்பை கிடங்காக மாற்றுவதற்கு எதிர்ப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Sept 2021 12:55 AM IST (Updated: 10 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே விதை நெல் பண்ணையை குப்பை கிடங்காக மாற்றுவதற்கு எதிர்ப்பு தொிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம், 

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் விதை நெல் பண்ணைக்கு சொந்தமான இடம்  வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த நிலையில் வருவாய்த்துறையினர், இந்த இடத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் பரவி வருகிறது.

 
இந்த நிலையில் நேற்று காலை ரெட்டிச்சாவடி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழிப்பாதை அமைப்பதற்கு இடத்தை ஆய்வு செய்வதற்காக வந்தனர். 
இந்த தகவல் பற்றி அறிந்த வெள்ளப்பாக்கம் கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது இந்த பகுதி முழுவதும் விவசாயம் செய்து வருகிறோம். விதை நெல் பண்ணையை குப்பை கிடங்கு மாற்றி அமைப்பதாக தகவல் வந்துள்ளது. இதுபோன்ற எந்த திட்டத்திற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறினார்கள்.  

அப்போது அதிகாரிகள் தற்போது வழி ஏற்படுத்தும் நடவடிக்கை மட்டுமே செய்ய வந்துள்ளோம். மேலும் எதிர்காலத்தில் குப்பைக்கிடங்கு அமைத்தாலும் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து விவசாயிகளின் நலன் காப்போம் என்றனர்.

 இதற்கு பொதுமக்கள் மேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story