தஞ்சையில் பூக்கள் விலை கடும் உயர்வு
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதே போல் இன்று முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், மல்லிகை ரூ.1,250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதே போல் இன்று முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், மல்லிகை ரூ.1,250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் கடந்த 3 நாட்கள் முகூர்த்த தினம் என்பதல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. தஞ்சை பூக்காரத்தெருவில் பூ சந்தை உள்ளது. இங்கு 60--க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 1,000 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
பூக்கள் விலை உயர்வு
இங்கிருந்து வேளாங்கண்ணி, நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும். அதன்படி தற்போது ஆவணி மாதத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து முகூர்த்த நாட்கள் என்பதாலும், இன்று விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
கனகாம்பரம் ரூ.2000
குறிப்பாக கனகாம்பரம் மற்றும் மல்லிகை, முல்லை பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. அதன்படி தஞ்சை பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்ப்பட்ட பூக்களின் விலை (கிலோ) வருமாறு:-
கனகாம்பரம் ரூ.2,000, மல்லிகை ரூ.1,250, முல்லை ரூ.1,000, அரளி ரூ.300, ரோஜாப்பூ ரூ.300, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.500, செண்டிப்பூ ரூ.50, கோழிக்கொண்டை ரூ.100, பன்னீர் ரோஜா (சிவப்பு) ரூ.150, வெள்ளை ரூ.250, மருக்கொழுந்து கட்டு ரூ.30.
விற்பனையும் அதிகரிப்பு
இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதே போல் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து மட்டும் சற்று குறைந்து காணப்பட்டது. இதர பூக்கள் அதிக அளவில் வரத்து இருந்தது. பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் விலையும் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்களும் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விற்பனையும் அதிக அளவில் காணப்பட்டது.என்றனர்.
Related Tags :
Next Story