கும்பகோணம் பகுதிகளில் வாழை மரங்கள் விற்பனை மும்முரம்


கும்பகோணம் பகுதிகளில் வாழை மரங்கள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:08 PM GMT (Updated: 9 Sep 2021 8:08 PM GMT)

கும்பகோணம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கும்பகோணம்:
கும்பகோணம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.  
முன்பதிவு 
கும்பகோணம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை மரங்களை பராமரித்து காய், பூ, இலை, தண்டு உள்ளிட்டவைகளை தனித்தனியாக மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வரும் விவசாயிகள் பண்டிகை மற்றும் விழா நாட்களில் அலங்காரத்திற்காக விழா நடைபெறும் இடங்களின் வாயிலில் கட்டுவதற்காக முழு வாழை மரங்களை வெட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களின் வாயிலில் கட்டுவதற்காக ஏராளமான வாடிக்கையாளர்கள் விவசாயிகளிடம் வாழை மரங்களுக்கு முன்பதிவு செய்து வைத்திருந்தனர். 
வாழை சாகுபடி 
இந்தநிலையில் நேற்று கும்பகோணம் பகுதிகளில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது  நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களை வெட்டி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்தனர்.
இதுகுறித்து வாழை விவசாயி ஒருவர் கூறியதாவது:-
திருமணம், திருவிழா, இந்துக்கள் பண்டிகை நாட்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் வாழை மரங்களுக்கு முன்பதிவு செய்து முன்பணம் கொடுத்து வைத்திருப்பது வழக்கம். இதனால் அந்தந்த நாட்களில் தேவையான வாழைமரங்களை நாங்கள் முன்கூட்டியே முறையாக பராமரித்து உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தோம். 
சுபமுகூர்த்த தினம் 
கொரோனா பரவல் காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தவும்,  விநாயகர் சதுர்த்தி விழா போன்ற விழாக்களுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வாழை மரங்களுக்கு முன்பதிவு செய்யாமல் இருந்து வந்தனர். இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் வாடிக்கையாளர்கள் சிலர் ஒரே சமயத்தில் வாழை மரங்களை முன்பதிவு செய்தனர். மேலும் கடந்த 3 நாட்களாக சுபமுகூர்த்த தினம் என்பதால் பல திருமண மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 
விற்பனை மும்முரம் 
இதனால் கடந்த இரண்டு நாட்களாக வாழைமரங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பண்டிகை நாட்களை கருத்தில் கொண்டு வாழை சாகுபடியில் மும்முரமாக ஈடுபடுவது வழக்கம். ஆனால் அரசின் கட்டுப்பாடுகளால் தற்போது எங்களால் போதிய அளவு உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் போது எங்களால் சரிவர வாழை மரங்களை கொடுக்க முடிவது இல்லை. எனவே அரசு பண்டிகைகள் திருவிழாக்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றார். 

Next Story