தங்க மோதிரத்தை பறித்த 2 போலி சாமியார்கள் கைது


தங்க மோதிரத்தை பறித்த 2 போலி சாமியார்கள் கைது
x
தினத்தந்தி 10 Sept 2021 2:03 AM IST (Updated: 10 Sept 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தங்க மோதிரத்தை பறித்த 2 போலி சாமியார்களை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் கூறைகுண்டு பாலாஜி நகரை சேர்ந்தவர் முனீஸ்வரி (வயது 30). இவரது வீட்டிற்கு சின்னமூப்பன் பட்டியை சேர்ந்த கடற்கரை (50), கருப்பசாமி (24) ஆகிய 2 பேர் வந்துள்ளனர். இருவரும் தாங்கள் சாமியார்கள் என்றும், அன்னதானத்திற்கு காசு கொடுங்கள் என்றும் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து முனீஸ்வரியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு உள்ளனர். முனீஸ்வரி ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தவுடன் அதை வீட்டு முற்றத்தில் வைக்கச் சொல்லி அதில் விபூதியை போட்டுள்ளனர். பின்பு கடற்கரை சொல்லும் மந்திரங்களை சொல்லுமாறு முனீஸ்வரியை மோதிரத்தை செம்பிற்குள் போடச் சொல்லியுள்ளனர். முனீஸ்வரியும் தன்னுடைய மோதிரத்தை செம்பிற்குள் போட்டுள்ளார். பின்னர் முனீஸ்வரியை வீட்டுக்குள் சென்று சாமி கும்பிட்டு விட்டு வருமாறு கூறியுள்ளனர். முனீஸ்வரி வீட்டிற்குள் சென்றவுடன் கருப்பசாமியும், கடற்கரையும் செம்பில் இருந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளனர். அப்போது வீட்டிற்குள் இருந்து திரும்பி வந்த முனீஸ்வரி இதை பார்த்து சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் பிடித்து அவளிடமிருந்து மோதிரத்தையும் மீட்டு சூலக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story