விபத்தில் சிவகாசியை சேர்ந்த 3 பேர் இறந்தது எப்படி?


விபத்தில் சிவகாசியை சேர்ந்த 3 பேர் இறந்தது எப்படி?
x
தினத்தந்தி 9 Sep 2021 9:19 PM GMT (Updated: 9 Sep 2021 9:19 PM GMT)

சாத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிவகாசியை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கி எப்படி இறந்தார்கள்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவகாசி, 
சாத்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சிவகாசியை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கி எப்படி இறந்தார்கள்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருமணம், வளைகாப்பு
இந்த கோர விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கரிசல்குளத்தில் நடைபெற்ற திருமணம் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிவகாசி சாரதாநகரை சேர்ந்தவர்கள் சிலர் கார்கள் மற்றும் பஸ்களில் சென்று கலந்து கொண்டனர். 
அதில் சிலர் சாரதாநகரை சேர்ந்த குருசாமி மகன் முருகன் என்பவருக்கு சொந்தமான காரில் சிவகாசி திரும்பி உள்ளனர். இந்த காரில் முருகன், அவரது மனைவி தனலட்சுமி, சண்முகவேல், அவரது மனைவி முத்துலட்சுமி, முத்துமாரி, அவரது அத்தை ராமலட்சுமி, முத்தையா என்பவரின் மனைவி ஆவுடையம்மாள், கருப்பசாமி மகள் சரவணப்ரியா ஆகியோர் வந்துள்ளனர். காரை சண்முகவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
கோரவிபத்து
கரிசல்குளத்தில் இருந்து புறப்பட்ட கார்  கோவில்பட்டி-சாத்தூர் ரோட்டில் உள்ள புல்வாய்பட்டி விலக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது   திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரில் வந்த முத்துமாரி, ராமலட்சுமி, முத்துலட்சுமி, முருகன், சரவணப்ரியா, சண்முகவேல், தனலட்சுமி, ஆவுடையம்மாள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. 
உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சாத்தூர், கோவில்பட்டி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேர் பலி
இதில் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தனலட்சுமி (வயது40), ஆவுடையம்மாள் (45) ஆகியோர் பரிதாபமாக இறந்து விட்டனர். 
அதே போல் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட சிறுமி சரவணப்ரியா (8) பரிதாபமாக இறந்தாள். பலத்த காயம் அமைந்த முத்துலட்சுமி, காரை ஓட்டிவந்த சண்முகவேல் ஆகியோர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story