சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் சிறப்பு முகாம்: கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ‘சிலிப்’ வினியோகம்
சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு, வீடாக சென்று ‘சிலிப்’ வினியோகம் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்
வீடு, வீடாக ‘சிலிப்’
சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 1,356 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் எப்படி வீடு, வீடாக சென்று பூத் ‘சிலிப்’ வழங்கப்படுமோ? அதேபோல், மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக அரசு அலுவலர்கள் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி ‘சிலிப்’ வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
ஒத்துழைப்பு அவசியம்
சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகும். எனவே, ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் என அனைவரும் இந்த கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில் வீடு, வீடாக களப்பணியாளர்கள் சென்று தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்பதை ஆராய்ந்து பூத் சிலிப்பை வழங்குவார்கள். அந்த சிலிப்பில் பெயர், முகவரி, ஊர், தடுப்பூசி மையம் போன்றவை இடம்பெறும்.
மாநகராட்சியில் 55 சதவீதம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பாதிப்பை விட 3-ம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவ கட்டமைப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 20 ஒன்றியங்கள் இருந்தாலும் ஏற்காட்டில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சேலம் மாநகராட்சியில் 55 சதவீதம் பேர், தலைவாசலில் 39 சதவீதம் பேர், ஓமலூரில் 32 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
மலைக்கிராமங்களில் வசிப்பவர்கள் தடுப்பூசி போட்ட அளவுக்கு கூட நகரவாசிகள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா சிறப்பு மையங்கள் எதுவும் இல்லை. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் தினமும் பதிவாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story