நாளை மறுநாள் 1,356 இடங்களில் சிறப்பு முகாம்: 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேட்டி
சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் 1,356 இடங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்,
பேட்டி
சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா சிறப்பு முகாம்கள் நடத்துவது தொடர்பாக நேற்று பிற்பகல் கலெக்டர் கார்மேகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 35 லட்சத்து 3 ஆயிரத்து 680 பேர் உள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29 லட்சத்து 22 ஆயிரத்து 926 பேர் ஆவர்.
சேலம் மாவட்டத்தில் மாநில அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முக்கிய அம்சம் என்று எடுத்துக்கொண்டால் தடுப்பூசி போடும் பணி ஆகும்.
1,356 இடங்களில்
மாவட்டத்தில் 13 லட்சத்து 46 ஆயிரத்து 378 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 93 ஆயிரத்து 556 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இன்னும் 15 லட்சத்து 76 ஆயிரத்து 548 பேர் தடுப்பூசி போட வேண்டியுள்ளது.
இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 48 சதவீதம் பேர் ஆகும். இன்னும் 52 சதவீதம் பேர் தடுப்பூசி போட வேண்டியுள்ளது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் 1,356 இடங்களில் தீவிர கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கும் முகாமை மாதிரி தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக செவிலியர்கள், கணினி ஆபரேட்டர்கள், களப்பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் அன்றைய தினம் முகாம்களில் பணியில் இருப்பார்கள்.
வீடு, வீடாக ஆய்வு
அதேநேரத்தில் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும். யார்? யார்? தடுப்பூசி போட்டுள்ளார்கள். யாரெல்லாம் தடுப்பூசி போட வேண்டும் என்பது குறித்து கள ஆய்வு செய்யப்படும்.
இதுதவிர, மாநகராட்சி ஆணையாளர், கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் கண்காணிப்பு குழு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 18 ஆயிரத்து 525 களப்பணியாளர்களும், 205 கண்காணிப்பு அலுவலர்களும் பணியில் இருப்பார்கள்.
2 லட்சம் பேருக்கு தடுப்பூசி
வாக்குச்சாவடிகளில் தேர்தல் எப்படி நடக்குமோ? அதேபோல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி போடாமல் இருந்தால் நாளை மறுநாள் நடக்கும் சிறப்பு முகாமிற்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மாவட்டத்தில் அன்றைய தினம் மட்டும் சுமார் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும். 3-வது அலை பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story