கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.11 லட்சம் பறிப்பு
திருப்பூரில் கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.11 லட்சத்தை மர்ம ஆசாமி பறித்துச் சென்றுவிட்டான். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.11 லட்சத்தை மர்ம ஆசாமி பறித்துச் சென்றுவிட்டான். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு...
திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூரை அடுத்த முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 45). தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை ஒரு இடத்தை கிரையம் செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தனது மனைவி தேன்மொழியுடன் (36) சென்றார். இதற்காக ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இடத்தை கிரையம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அடுத்த வாரம் செய்து கொள்ளலாம் என்று கணவன் மனைவி முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். ராமநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, தேன்மொழி பணப்பையுடன் பின்னால் அமர்ந்து சென்றார்.
ரூ.11 லட்சம் பறிப்பு
அவர்கள் சின்ன பொம்மநாயக்கன்பாளையம் கேத்தம்பாளையம் அருகே வந்தபோது அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென தேன்மொழி கையில் இருந்த பணப்பையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
ஆனால் அந்த வாலிபர் பணப்பையுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மகேந்திரன், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தேன்மொழியிடம் இருந்து பணப்பையை பறித்துச் சென்ற வாலிபர் அந்தப் பையை மோட்டார்சைக்கிளின் முன்புறம் வைத்துக்கொண்டு கேத்தம்பாளையம் வழியாக சென்றது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பட்டப்பகலில் கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடமிருந்து ரூ.11 லட்சத்தை வாலிபர் பறித்து சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story