தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாட்டம்


தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2021 1:05 PM GMT (Updated: 10 Sep 2021 1:05 PM GMT)

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவோ தமிழக அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், அவ்வாறு வழிபடும் விநாயகர் சிலைகளை வீட்டில் உள்ள ஒருவர் மட்டும் எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
தங்ககவசம் அணிவிப்பு
அதைத்தொடர்ந்து நேற்று தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் எளிய முறையில் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தூத்துக்குடி 2-ம் கேட் வரத விநாயகர் கோவிலில் நேற்று விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படாததால் அனைத்து கோவில்களிலும் வெளியில் நின்று முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி விநாயகரை வழிபட்டு சென்றனர்.
வீடுகளில் வழிபாடு
பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த போதிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடினார்கள். வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறுவர்-சிறுமிகளும், பெண்களும் மிகுந்த ஈடுபாடுடன் வழிபாடு செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலையிலேயே வீடுகளை சுத்தப்படுத்தி விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், அவல், கடலை, சர்க்கரை பொங்கல், பாயாசம், வடை மற்றும் பல்வேறு பழங்கள் வைத்து வழிபாடு செய்து விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
போலீசார் கண்காணிப்பு
இந்த வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனித்தனியாக எடுத்து சென்று கடலில் கரைக்கின்றனர்.
தமிழக அரசு உத்தரவுப்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதை தடுக்கவும், விநாயகர் சிலை ஊர்வலங்கள் செல்வதை தடுக்கவும் தூத்துக்குடியில் நேற்று பல்வேறு இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story