திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்; போலீசாருடன் வாக்குவாதம்
திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக சென்ற 70 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக சென்ற 70 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் குடைப்பாறைபட்டி
தமிழகத்தில் கொரோனா பரவலால் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் இந்து அமைப்பினர் தடையை மீறி சிலைகளை வைப்பதாக தெரிவித்து இருந்தன.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்கப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் துணை சூப்பிரண்டுகள் கோகுலகிருஷ்ணன், சுகுமார் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி நேரில் வந்து ஆய்வு செய்தார்.
தடையை மீறி ஊர்வலம்
இதற்கிடையே மதியம் 12 மணி அளவில் அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சுமார் 3½ அடி உயரமுள்ள விநாயகர் சிலையை இந்து முன்னணியினர் கொண்டு வந்தனர். பின்னர் கோவிலில் வைத்து விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது தாரை, தப்பட்டையை இசைக்க தொடங்கினர்.
இதற்கு முதலில் போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால், லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தாரை, தப்பட்டையை இசைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.
அதன்பின்னர் இந்து முன்னணி கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சஞ்சீவிராஜ், வீர திருமூர்த்தி, நகர தலைவர் திருஞானம் உள்ளிட்டோர் விநாயகர் சிலையை எடுத்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
சிலை பறிமுதல்
கோவிலில் இருந்து சில அடிதூரம் சென்ற நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் தாசில்தார் வடிவேல்முருகன் முன்னிலையில் விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடையை மீறி சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்து முன்னணியினரிம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று கோட்டை குளத்தில் கரைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பஸ்நிலையம்
இதற்கிடையே மாலையில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி தலைமையில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர். இதை தொடர்ந்து சிலை ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக சிவசேனா மாநில செயலாளர்கள் அசோக்பாபு, முனீஸ்வரன், இளைஞர் அணி செயலாளர் தமிழ்செல்வன், மாணவர் அணி மாவட்ட தலைவர் தன்விக் அர்ஜூன், இந்து தர்ம சக்தி தலைவர் மாணிக்கம், அர்ஜூன் சேனா தலைவர் செல்வம் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்து, கோட்டை குளத்தில் கரைத்தனர்.
வேடசந்தூர்
வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் தென் மண்டல செயலாளர் மணிகண்டன் தலைமையிலும், நிர்வாகி ராமச்சந்திரன், அகில இந்து சபா மாநில செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் முன்னிலையிலும் நிர்வாகிகள் சிறிய விநாயகர் சிலைகளை கையில் ஏந்தியபடி மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் அக்ரஹார தெரு, மார்க்கெட் ரோடு, குங்குமக்காளியம்மன் கோவில் வழியாக சென்று குடகனாற்றில் முடிவடைந்தது. அங்கு சிலைகளை இந்து மக்கள் கட்சியினர் கரைத்தனர்.
வடமதுரையில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பில் விநாயகர் சிலைகள் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் வடமதுரையில் உள்ள நரிப்பாறை குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.
Related Tags :
Next Story