வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற சேலைகளால் வேலி அமைக்கும் விவசாயிகள்
பெரும்பாறை பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற தோட்டங்களில் சேலைகளால் விவசாயிகள் வேலி அமைத்து வருகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை, சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் காபி சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. மேலும் காபிக்கு ஊடுபயிராக மிளகு, வாழை, ஏலக்காய், அவகோடா, ஆரஞ்சு, எலுமிச்சை, சவ்சவ், அவரை, பீன்ஸ் உள்ளிட்டவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் காட்டெருமை அட்டகாசம் அதிகரித்துள்ளது. காட்டெருமைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதேபோல் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள், தோட்டத்தின் முள்வேலிகளை எளிதில் உடைத்து விட்டு உள்ளே புகுந்து விடுகின்றன. இதையடுத்து விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக சேலைகளால் வேலி அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு வண்ணங்களில் உள்ள இந்த சேலைகளை பார்த்து வனவிலங்குகள் அச்சப்பட்டு தோட்ட பகுதிக்குள் வருவதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும் விளை நிலங்களுக்குள் விலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story