கோவில், வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்


கோவில், வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2021 4:13 PM GMT (Updated: 2021-09-10T21:43:40+05:30)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் கொண்டாடினர்.

முருகபவனம்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் கொண்டாடினர். 
சதுர்த்தி விழா
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்கப்படாததால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாடினர். அப்போது விநாயகருக்கு அருகம்புல், எருக்கம் மாலை சூட்டி வாழை இலையில் சுண்டல், விதவிதமான கொழுக்கட்டைகள், பழங்கள் படைத்து வழிபாடு செய்தனர். மேலும் கோவில்களில் பக்தர்கள் இன்றி சிறப்பு பூைஜகள் நடைபெற்றன. 
வெள்ளை விநாயகர்
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் உள்ள வெள்ளை விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதன்பிறகு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், ஆர்த்தி தியேட்டர் சாலை உப்புகேணி விநாயகர் கோவில், கிழக்கு ரதவீதி செல்வகணபதி கோவில், சொசைட்டி தெரு சுதந்திர விநாயகர் கோவில், மேற்கு ரதவீதி அக்கசாலை விநாயகர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி விழா, பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது.
திருமலைக்கேணி
நத்தத்தில் உள்ள விநாயகர் கோவில்களிலும், கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 
பழனி
பழனி முருகன் கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் பட்டத்து விநாயகர் கோவில், பாதவிநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழனி பகுதியில் பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் மாலையில் சண்முகநதியில் சிலைகளை கரைத்தனர். 
கொடைக்கானல்
கொடைக்கானல் நகரில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனிடையே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அகற்ற வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி நேற்று இரவு கொடைக்கானல் டெப்போ பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் செல்லும் ஓடையில் சிலைகள் கரைக்கப்பட்டது.
450 இடங்கள்
திண்டுக்கல்லில் சில பகுதிகளில் கோவில்கள் அமைந்துள்ள இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுஇடத்தில் சிலை வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர். பின்னர் சிலைகளை எடுத்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.
இதுபோல ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் கோவில்களின் முன்பும், கோவில்களின் வளாகத்திலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதுதவிர பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து தர்ம சக்தி உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களுடைய வீட்டு முன்பு சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் நேற்று 450 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டன. மேலும் கொரோனா பரவல், ஊர்வலத்துக்கு தடை ஆகியவை காரணமாக பெரும்பாலான சிலைகள் நேற்று மாலையிலேயே கரைக்கப்பட்டன. இதையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story