ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் மாட்டுவண்டி பாய்ந்து விவசாயி பலி


ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் மாட்டுவண்டி பாய்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 10 Sep 2021 4:24 PM GMT (Updated: 10 Sep 2021 4:24 PM GMT)

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் மாட்டு வண்டி பாய்ந்ததில் அதை ஓட்டிய விவசாயி பலியானார்.

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 65). விவசாயி. இவர் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று மதியம் 1 மணியளவில் மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு தனது தோட்டத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென காளைகள் மிரண்டு தறிகெட்டு ஓடியது. ஆனால் அவரால் காளைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் சாலை ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத 80 அடி ஆழ கிணற்றுக்குள் மாட்டு வண்டி பாய்ந்தது. 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கிணற்று தண்ணீருக்குள் மாட்டு வண்டியுடன் காளைகள் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் மூழ்கி கொண்டு இருந்தனர். இதுகுறித்து உடனடியாக ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 2 பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி சுமார் 6 மணி நேரம் போராடி கருப்பண்ணன் மற்றும் காளைகளின் உடல்களை பிணமாக மீட்டனர்.
இதையடுத்து கருப்பண்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story