நிலக்கரி நீராவி என்ஜின் குன்னூர் வந்தது


நிலக்கரி நீராவி என்ஜின் குன்னூர் வந்தது
x
தினத்தந்தி 10 Sept 2021 10:26 PM IST (Updated: 10 Sept 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

மலைரெயிலுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் குன்னூர் வந்தது. அதனை ரெயில்வே ஊழியர்கள் வரவேற்றனர்.

குன்னூர்,

மலைரெயிலுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் குன்னூர் வந்தது. அதனை ரெயில்வே ஊழியர்கள் வரவேற்றனர்.

மலைரெயில்

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். 

ஆரம்ப காலத்தில் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டது. இந்த என்ஜின் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டு, கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு நீலகிரியில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலமும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமும் மலைரெயில் இயக்கப்படுகிறது.

புதிய என்ஜின்

இந்த நிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு முதன்முறையாக நிலக்கரி நீராவி என்ஜின் தயாரிக்க தென்னக ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி ரூ.8 கோடியே 7 லட்சம் செலவில் புதிய நிலக்கரி நீராவி என்ஜின் தயாரிக்கும் பணி, திருச்சியில் உள்ள பொன்மலை ரெயில்வே பணிமனையில் நடைபெற்றது.

இதையடுத்து பணி முடிந்து பொன்மலையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு என்ஜின் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹில்குரோவ் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

வரவேற்பு

இது வெற்றியடைந்ததை தொடர்ந்து குன்னூருக்கு நிலக்கரி நீராவி என்ஜின் கொண்டு வரப்பட்டது. அதனை ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் வரவேற்றனர். மேலும் டிரைவருக்கு மலர் கொடுக்கப்பட்டது. அந்த நிலக்கரி நீராவி என்ஜினில் உள்ள சிறு பழுதுகள் நீக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story