கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு
கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு.
ஊட்டி,
ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் கவர்னர்சோலை, மார்லிமந்து உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளது. இங்கு காட்டெருமை, சிறுத்தைப்புலி, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவ்வப்போது வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகருக்குள் புகும் நிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டெருமை ஊட்டி கலெக்டர் அலுவலக பகுதிக்கு வந்தது. பின்னர் வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமை அங்கிருந்த புற்களை மேய்ந்தது. தொடர்ந்து அருகே பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதிக்கு சென்றது. நேற்று விடுமுறை நாள் என்பதால் அலுவலகங்கள் வெறிச்சோடி இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் நகருக்குள் புகுந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியில் இருந்து நடைபாதை வழியாக காட்டெருமை கீழே சென்றது. பின்னர் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கூட்டத்தில் இருந்து பிரிந்த காட்டெருமை ஒன்று நகருக்குள் நுழைந்தது. வழி தவறி வந்து இருக்கலாம் என்றனர். ஊட்டியில் பகல் நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story