நீர்மட்டம் குறைந்துவரும் வைகை அணை
ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த மாதம் முழுக்கொள்ளளவை எட்டியது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் ஒரு போக பாசனத்திற்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. சராசரியாக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை எதுவும் பெய்யாத நிலையில், வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்தது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதாலும், நீர்வரத்து குறைந்த காரணத்தாலும் வைகை அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 25 நாட்களில் வைகை அணை நீர்மட்டம் 10 அடி குறைந்துள்ளது.
தற்போது வைகை அணை நீர்மட்டம் 60.12 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,819 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 701 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதால் வைகை அணை நீர்மட்டம் மேலும் சரியும் நிலை உருவாகியுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story