நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்


நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 10 Sep 2021 5:20 PM GMT (Updated: 10 Sep 2021 5:22 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 295 இடங்களில் நடக்கிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 295 இடங்களில் நடக்கிறது.

முதன்மை மாவட்டம்

18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மை மாவட்டமாக நீலகிரி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 

இதற்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

295 இடங்களில் முகாம்

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 295 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். ஒரு முகாமில் தடுப்பூசி செலுத்தும் கிராம சுகாதார செவிலியர் அல்லது செவிலியர், ஒரு தரவு பதிவாளர், 2 அங்கன்வாடி பணியாளர்கள் (பொதுமக்களை அழைத்து வர) என மொத்தம் 4 பேர் பணியில் ஈடுபடுவார்கள். மொத்தம் 295 முகாம்களுக்கு 1,180 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதில் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதற்காக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களும் தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை வினியோகித்து வருகின்றனர். இந்த பணியில் 1,632 பேர் ஈடுபட்டு உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 

நிபா வைரசுக்கு எதிராக...

நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், நாள்பட்ட வியாதி உள்ளவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் என அனைவரும் தவறாமல் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி நிபா வைரஸ் பாதிப்புக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது. எனவே நீலகிரியில் உள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நிபா வைரஸ் தொற்றில் இருந்து காத்து கொள்வதோடு, கொரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story