விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு


விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 5:25 PM GMT (Updated: 2021-09-10T22:58:03+05:30)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

தர்மபுரி,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

தர்மபுரி நகரில் சாலை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தங்க கவசம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் அந்த பகுதியில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவில், தெற்கு ெரயில்வே லைன் ரோடு வலம்புரி விநாயகர் கோவில், அப்பாவு நகர் விநாயகர் கோவில், நெசவாளர் நகர் விநாயகர் கோவில், அன்னசாகரம் விநாயகர் கோவில், கடைவீதி தேர் நிலையம் பகுதியில் அமைந்துள்ள செல்ல கணபதி கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

சிலைகள் வைத்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டின் போது சாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல், எள்ளு உருண்டை, விதவிதமான பழங்கள் வைத்து படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலையே ஏராளமானோர் அவரவர் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைத்தனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளால் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா சற்று கலை இழந்து காணப்பட்டது.

Next Story