ஆம்பூர் அருகே கைலாசகிரி மலை கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலி


ஆம்பூர் அருகே கைலாசகிரி மலை கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலி
x
தினத்தந்தி 10 Sep 2021 5:30 PM GMT (Updated: 2021-09-10T23:00:12+05:30)

ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையில் உள்ள கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன்- தங்கை பலியானார்கள். தந்தையின் கண் முன் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையில் உள்ள கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன்- தங்கை பலியானார்கள். தந்தையின் கண் முன் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மீன்பிடித்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜஸ்வந்த் (வயது 8) என்ற மகனும், ஹரிபிரீத்தா (6) என்ற மகளும் உண்டு. கள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஜஸ்வந்த் 4-ம் வகுப்பும், ஹரிபிரீத்தா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கடாம்பூர் கிராமத்தில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஊத்தங்கரையிலிருந்து குடும்பத்தோடு கடாம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார். 

குளத்தில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி

நேற்று காலை லோகேஸ்வரன், தனது 2 குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றார். அப்போது அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இந்த நேரத்தில் அவருடன் சென்றிருந்த ஜஸ்வந்த், ஹரிபிரீத்தா ஆகிய இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்தனர். நீச்சல் தெரியாததால் குளத்தில் இருவரும் தத்தளித்தனர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உமராபாத் போலீசார் மற்றும் ஆம்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போட்டோ எடுத்தார்

கைலாசகிரி மலைக்கு தனது குழந்தைகளுடன் சென்ற லோகேஸ்வரன் தனது குழந்தைகளை மலையில் ஆங்காங்கே வைத்து செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். பின்னர் குளத்திற்கு சென்ற போது குழந்தைகள் தவறி விழுந்து இறந்ததை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அங்கிருந்து குறிப்பிட்ட துரத்திற்கு சாலை வசதி கிடையாது. இதனால் இறந்த 2 பேரின் உடல்களையும் உமராபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி தனது தோளில் சுமந்து வந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

Next Story