நாட்டறம்பள்ளியில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1¾ லட்சம் திருட்டு


நாட்டறம்பள்ளியில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1¾ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 10 Sep 2021 5:45 PM GMT (Updated: 2021-09-10T23:15:11+05:30)

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1¾ லட்சம் திருட்டு

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் வீரகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன். இவரின் மகன் அரசுகுமார் (வயது 28), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு வங்கியில் தனது தங்க நகையை அடகு வைத்து, அதன் மூலம் பெற்ற ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை தனது ஸ்கூட்டர் டிக்கில் வைத்திருந்தார். 

பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு வந்த தனது மாமியாரை அழைத்துச் செல்வதற்காக ஸ்கூட்டரை வெளியே நிறுத்தி விட்டு, அந்தத் தனியாா் வங்கியின் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரின் டிக்கி திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அரசுகுமார் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தனர். அதில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் ஸ்கூட்டரின் டிக்கியை திறந்து, பணத்தைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. காட்சியில் பதிவானவர்களின் உருவங்களை அடையாளமாக வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story