78 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


78 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x
தினத்தந்தி 10 Sept 2021 11:27 PM IST (Updated: 10 Sept 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 78 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

நாகப்பட்டினம்;
நாகை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 78 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
78 விநாயகர் சிலைகள்
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. அதன்படி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது.
மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அரசு தடை விதிக்கவில்லை. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் இந்து முன்னணியினர், விநாயகர் குழுவினர் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும், வீடுகளிலும் என மொத்தம் 78 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
போலீஸ் பாதுகாப்புடன்
இதையடுத்து பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அருகில் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி ஊர்வலமாக செல்வதை தடுக்க 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்படி நாகை  பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மோட்டார் சைக்கிள்களிலும், லோடு ஆட்டோக்களிலும் தனித்தனியாக சாலையில் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து நாகை ஆரிய நாட்டு தெரு, புதிய கடற்கரை, நாகூர் கடற்கரை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கரைக்கப்பட்டன. 
வீடுகளில் சிலை வைத்து
நாகை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் விநாயகர்சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். ஆனால் கோவில்களுக்கு வந்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யவில்லை. சில பக்தர்கள் பூட்டியிருந்த கோவில்களில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆனால் கோவில்களில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள நாகபரண விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் நாகையில் விநாயகர் சதுர்த்தி விழா களை  இழந்து காணப்பட்டது.
வேதாரண்யம்
வேதாரண்யம் நகரில் உள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு  தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 
 இதைப்போல வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர்சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Next Story