தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார்.
கரூர்
பாராட்டு விழா
கரூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நேற்று புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், முன்னிலை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் இணைப்புக்காக பதிவு செய்து ஏறத்தாழ 18 ஆண்டுகள் காத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 பேர். இதுவரை தமிழக அரசின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் அறிவிப்பை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். இதுவரை தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் இலவச மின் இணைப்பு கருணாநிதி வழங்கிய பிறகு ஒரே ஆண்டில் வழங்கும் அதிக பட்ச மின் இணைப்பு இதுவே ஆகும்.
ஆய்வு கூட்டம் நடக்கிறது
கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு 40 ஆயிரம் மின் இணைப்பு வழங்க இலக்கு வைத்தனர். அதிலும் 8 ஆயிரம், 10 ஆயிரம் 11 ஆயிரம் தான் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. 1 லட்சம் மின் இணைப்பு வழங்குவது தொடர்பான மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் இன்று திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான உரிய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட துணை மின் நிலையங்களின் எண்ணிக்கையும் இந்த முறை தான் மிக அதிகமாக உள்ளது.
விசாரணை முன் எடுக்கப்படும்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரியும், தூத்துக்குடியில் 74 ஆயிரம் டன் நிலக்கரியும் பதிவேட்டுக்கும், இருப்புக்கும் குறைந்து உள்ளது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட விசாரணை தொடர்ந்து முன் எடுக்கப்படும்.
இறுதி கட்ட விசாரணைக்கு பிறகு அடுத்த நிலை குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து அதற்கு உண்டான உத்தரவு பிறப்பிக்கப்படும். யார் தவறு செய்தார்கள் எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது. எதனால் இப்படி இருப்புகள் குறைகிறது என்பதை முழுவதுமாக ஆய்வு செய்யப்படும். வரக் கூடிய காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாத வகையில் சீர் அமைக்க வேண்டும்.
2 தடுப்பணைகள்
கரூர் மாவட்டத்திற்கு 2 தடுப்பணைகள் முதல்-அமைச்சர் கொடுத்துள்ளார். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 100 சதவிகிதம் நிறைவேற்ற படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story