பத்தியத்தை பின்பற்ற தேவையில்லை: கொரோனா தடுப்பூசி செலுத்தினால் 97 சதவீதம் இறப்பு ஏற்படாது-கலெக்டர் ஸ்ரேயாசிங் பேட்டி


பத்தியத்தை பின்பற்ற தேவையில்லை: கொரோனா தடுப்பூசி செலுத்தினால் 97 சதவீதம் இறப்பு ஏற்படாது-கலெக்டர் ஸ்ரேயாசிங் பேட்டி
x
தினத்தந்தி 10 Sep 2021 6:38 PM GMT (Updated: 10 Sep 2021 6:38 PM GMT)

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் பத்தியத்தை பின்பற்ற தேவையில்லை என்றும், 97 சதவீதம் இறப்பு ஏற்படாது என்றும் கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.

நாமக்கல்:
கலெக்டர் ஸ்ரேயாசிங் பேட்டி
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) வரை 18 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சத்து 16 ஆயிரத்து 663 பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 543 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர். அதன்படி மாவட்டத்தில் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஆனால் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் 50 சதவீதம் பேர் உள்ளனர்.
அவர்களை கண்டறிய தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வீடு வீடாக சென்று தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். தடுப்பூசியை போட்டு கொண்டால் 97 சதவீதம் கொரோனாவால் இறப்பு ஏற்படாது என கூறப்படுகிறது. எனவே உயிரை காப்பாற்ற தடுப்பூசி முக்கியமானதாக உள்ளது. அதனால் தான் தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி வருகிறது.
பத்தியம்
பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும். இதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் எந்த பத்தியத்தையும் பின்பற்ற தேவையில்லை. அனைத்து முகாம்களிலும் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களை டாக்டர்கள் சுமார் ½ மணி நேரம் கண்காணித்த பிறகே அனுப்பி வைப்பார்கள்.
மாவட்டத்தில் 41 நுண் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. சமீபத்தில் கொரோனாவால் குடும்பங்களே பாதிக்கப்படும் சூழலை காண முடிகிறது. அதை தவிர்க்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அனைவரும் தவறாமல் அரசின் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள 700 முகாம்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படும்.
இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்தார்.
பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், திட்ட இயக்குனர் வடிவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story