விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 10 Sep 2021 6:38 PM GMT (Updated: 2021-09-11T00:08:12+05:30)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காந்தி நகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விநாயகர் சிலை பிரதிஷ்டை
இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், கொரோனா விதிமுறையைக் கடைபிடித்து பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. பொது இடத்தில் சிலை வைத்து வழிபட தடைவிதிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி நகர இந்து முன்னணி சார்பில், கிருஷ்ணகிரி ஆனந்த் தியேட்டர் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் தலைமை விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. தலைமை விநாயகருக்கு ராஷ்ட்ரிய சுயம்சேவக், பா.ஜ., இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
ஓசூர்
ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாடினர். விழாவையொட்டி ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டது. இதேபோல், பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இந்த கோவில்களில், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தவாறும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
ஓசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், முன்னதாக அருகில் உள்ள நாகதேவதை கோவிலுக்கு சென்று பாம்பு புற்றுக்கு பால் ஊற்றியும், அரசமரத்திற்கு பூஜைகள் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்தும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்தும் வழிபட்டனர். மேலும், உறவினர்கள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினருடன் இனிப்புகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.

Next Story