வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கி 2 விவசாயிகள் பலி
வேப்பனப்பள்ளி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் 2 விவசாயிகள் பலியாகினர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் 2 விவசாயிகள் பலியாகினர்.
யானை மிதித்து கொன்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழக எல்லையான கொங்கனப்பள்ளி மற்றும் எப்ரி வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் சிகரனாகனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, பூதிமுட்லு, நேரலகிரி, எப்ரி, சிங்கிரிப்பள்ளி, சிகரலப்பள்ளி பகுதியில் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் பாடப்பட்டி வனப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஒரு காட்டு யானை இரவு தமிழக வனப்பகுதிக்குள் எப்ரி வழியாக வந்துள்ளது.
இந்த யானை சிகரலப்பள்ளி கிராமத்தில் தக்காளி தோட்டத்துக்கு வந்தது. அங்கு காவலில் இருந்த விவசாயி சந்திரசேகரன் (வயது 32) என்பவர் யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து ஓடினார். ஆனால் யானை அவரை ஓட ஓட விரட்டி சென்று காலால் மிதித்து கொன்றது.
விவசாயி பலி
இதைத்தொடர்ந்து அந்த யானை அருகே உள்ள நேரலகிரி கிராமத்திற்கு சென்று அங்கு நிலக்கடலைக்கு இரவு காவலில் இருந்த விவசாயி நாகராஜ் (56) என்பவரையும் தாக்கி கொன்றது. பின்னர் அந்த காட்டுயானை அருகே உள்ள கரியனப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. நேற்று காலை சந்திரசேகரன், நாகராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்ற போது யானை தாக்கி 2 பேரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து நாகராஜின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் போலீசார் சிகரலப்பள்ளி கிராமத்திற்கு சென்றனர். சந்திரசேகரனின் உறவினர்கள் உடலை எடுக்கவிடாமல் அவர்களை தடுத்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் வனச்சரகர் மகேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யானையை உடனடியாக விரட்ட வேண்டும். சந்திரசேகரனின் குடும்பத்திற்கு உரிய நிவராணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
மேலும் முதல் கட்டமாக அவருடைய குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வனச்சரகர் மகேந்திரன் வழங்கினார். பின்னர் உறவினர்கள் சந்திரசேகரனின் உடலை எடுத்து செல்ல அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் சந்திரசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கி 2 விவசாயிகள் பலியான சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்சரிக்கை
இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் வேப்பனப்பள்ளி பகுதிகளில் காட்டு யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதியை ஒட்டி செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story