110 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
தஞ்சை மாவட்டத்தில் 110 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் 110 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச்செல்லவும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்க கோரி இந்து அமைப்புகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தடையை மீறி பிரதிஷ்டை
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை முதலே பல்வேறு இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. தஞ்சை சேவப்பநாயக்கன் வாரி செல்லும் இடம், மாநகராட்சி அலுவலகம் எதிரே, டவுன் கரம்பை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 3 அடி உயரம் வரையிலான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுஇடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை பறிமுதல் செய்து அருகில் உள்ள கோவிலுக்குள் கொண்டு வைத்தனர். மேலும் பல இடங்களில் வீடுகளின் முன்பு சிலைகள் வைக்கப்பட்டன. தஞ்சை சின்ன ஆஸ்பத்திரி அருகே பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்திலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
சிலைகள் கரைப்பு
தஞ்சை மாநகரில் மட்டும் 16 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 110 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் தஞ்சை மாநகரில் 14 இடங்களில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் கரைக்கப்பட்டன. இதே போல் மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளும் ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு வரை 80-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள் 12-ந்தேதி கரைக்கப்படும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story