களையிழந்த விநாயகர் சதுர்த்தி விழா


களையிழந்த விநாயகர் சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 10 Sep 2021 8:15 PM GMT (Updated: 2021-09-11T01:45:26+05:30)

விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்டது.

பெரம்பலூர்:

சிலைகள் வைக்க தடை
விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்தது.
இருப்பினும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் 2 அடி வரையிலான விநாயகர் சிலைகளை பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தி, பின்னர் 3-ம் நாள் தனி நபராக அந்த சிலையை எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் அல்லது அருகே உள்ள கோவில்களின் முன்பு சிலைகளை வைத்து விட்டு சென்றால், அவற்றை இந்து சமய அறநிலையத்துறையினர் எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவில்லை.
மூடப்பட்ட கோவில்கள்
ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை உள்ளதால், நேற்று விநாயகர் கோவில்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காட்சியளித்தன. ஆனால் அந்த கோவில்களில் ஆகம விதிகளின் படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் கோவிலின் வெளியே நின்று விநாயகரை தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத விநாயகர் கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் காலை, மாலை நேரங்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து, படையலிட்டு வழிபாடு நடத்தினர். பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் அரசின் கட்டுப்பாடுகளால் பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்டது.
சிறப்பு அபிஷேகம்
பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா செல்வ மகா வெற்றி கணபதி சன்னதியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பகலில் விநாயக பெருமானுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், இரவில் 210 மகா சித்தர்கள் யாகமும் மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி சுந்தர மகாலிங்கம் சுவாமி, தவசிநாதன் சுவாமி தலைமையில் நடைபெற்றது. உலக மக்கள் நலன் கருதியும், கொடிய நோய் தொற்றில் இருந்து மக்கள் மீ்ண்டு நல்வாழ்வு பெற்று வாழ சுமார் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
இதில் விநாயகருக்கு பிடித்த பிடி கொழுக்கட்டை, கரும்பு, எள்ளு உருண்டை, வடை, மோதகம், புளி சாதம், பூர்ண கொழுக்கட்டை, பாசிப்பயறு போன்ற பலகாரங்கள் வைத்து படைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
பெரம்பலூரில் தினசரி காய்கறி மார்க்கெட் தெருவில் உள்ள கச்சேரி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக, ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. இரவில் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
தனியார் இடத்தில் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி பா.ஜ.க. சார்பில், மங்களமேட்டை அடுத்துள்ள சிறுமத்தூர் ஊராட்சி முருக்கன்குடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 5 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலைக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு சுண்டல், கொழுக்கட்டை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தலைவர் மகேந்திரன், இந்து முன்னணி செந்தில்குமார், வேப்பூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ெபாது இடத்தில் இல்லாமல் தனியார் இடத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டதால், அந்த சிலை அகற்றப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
சிலைகள் விற்பனைக்கு போலீசார் கெடுபிடி
தமிழக அரசு 2 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து பொதுமக்கள் வழிபடலாம் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரம்பலூாில் 2 அடி வரையிலான விநாயகர் சிலைகளை கூட கடைகளில் விற்பனை செய்ய விடாமல் போலீசார் கெடுபிடி செய்தனர். கடைகளில் பொதுமக்களின் பார்வையில் படும்படியாக விநாயகர் சிலைகளை அடுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை, போலீசார் நேரில் சென்று எச்சரித்து விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதை நிறுத்தி, அவற்றை கடையின் ஒரு அறையில் எடுத்து வைக்கக்கூறி, பின்னர் அறை கதவை பூட்டி சாவியை போலீசார் வாங்கிச்சென்றனர். போலீசாரின் கெடுபிடியால் சிலை விற்பனையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
விநாயகர் சிலை பறிமுதல்
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் நகரில் ஒரு தனி நபரின் மரப்பட்டறைக்கு முன்பு இந்து முன்னணியினரால் நேற்று மதியம் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து மாலையில் அங்கு வந்த வருவாய்த்துறையினர் சிலையை பட்டறைக்கு உள்ளே வைத்து வழிபாடு செய்ய வேண்டும், என்றனர். அதற்கு இந்து முன்னணியினர் வைத்த சிலையை எடுத்தால் தெய்வ குற்றம் ஆகிவிடும் என்றனர். இதையடுத்து வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை பறிமுதல் செய்து வாகனத்தில் கொண்டு சென்றனர்.

Next Story