கடலூர் மாவட்டத்தில் வீடுகளில் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி விழா
கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வீடுகளில் களை கட்டியது.
கடலூர்,
கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று பொதுமக்கள் வழிபட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது. சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இருப்பினும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளுக்கு தனி நபர்கள் சென்று சிலையை கரைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி கடலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. போலீசாரும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
வீடுகளில் சிலை வைத்து வழிபாடு
அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூரில் பாரதி சாலை, நேதாஜி சாலை, உழவர் சந்தை, பான்பரி மார்க்கெட் என பல்வேறு இடங்களில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இது தவிர வண்ண குடைகள், பழங்கள், அவல், பொறி, விளாம்பழம், சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடித்தது. இதை வாங்கிய பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனால் பெரும்பாலான வீடுகள் நேற்று சதுர்த்தி விழா களைக்கட்டி காணப்பட்டது.
கோவில்களில் சிறப்பு பூஜை
அப்போது விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து வழிபட்டனர். வீடுகளில் வைத்து படைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 3-வது நாள் நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று கரைப்பார்கள். ஆனால் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால், தனிநபர்கள் மட்டும் சென்று கரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் அருகில் உள்ள கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரும்பாலான கோவில்கள் திறக்காவிட்டாலும், கோவில் ஊழியர்கள் மூலம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 16 இடங்களில் விநாயகர் சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுக்கு நேற்று சிறப்பு பூஜைகள், அலங்கார, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
போலீசார் பாதுகாப்பு
விழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறதா? என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
5 அடி உயர சிலை
இதற்கிடையே சிதம்பரம் நகர பகுதியில் உள்ள முத்து மாணிக்க நாடார் தெருவில், நேற்று காலை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவலோகநாதன் தலைமையில், தெருவில் உள்ள காலி மனையில 5 அடி உயர விநாயகர் சிலையை வைத்து, வழிபாடு செய்தனர். பொது இடத்தில் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை உத்தரவு இருக்கும் நிலையில் அ தை மீறும் வகையில் இங்கு சிலை வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் கண்காணிப்பு
மேலும் விநாயகர் சதுர்த்தி விழா என்றாலே சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றங்கரைகளை கட்டி விடும். சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொது இடங்களில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கொள்ளிடம் ஆற்றில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் நேற்று காலை முதல் அண்ணாமலை நகர் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story