வீடு முன்பு வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்


வீடு முன்பு வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
x
தினத்தந்தி 11 Sept 2021 1:48 AM IST (Updated: 11 Sept 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

வீடு முன்பு வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

தா.பழூர்:

வீடு முன்பு விநாயகர் சிலை
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கீழசிந்தாமணி கிராமத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் தனது சொந்த இடத்தில் வீட்டின் முன்பு விநாயகர் சிலை வைத்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று விநாயகர் சிலையை அகற்றுமாறு கூறினர்.
அதற்கு வெற்றிச்செல்வன், சொந்த இடத்தில்தான் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் வைக்கவில்லை என்று தெரிவித்து, அதனை அகற்ற முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து இந்து முன்னணி வட்டார தலைவர் விஜய் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அங்கு வந்தனர். மேலும் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் சம்பவ இடத்திற்கு வந்து விநாயகர் சிலை வைத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
5 பேர் கைது
இதையடுத்து விநாயகர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், எங்களை கைது செய்து பின்னர் அப்புறப்படுத்துங்கள் என்று இந்து முன்னணியினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், அந்த இடத்தில் சிலை வைத்தவர்கள் மீது வழக்கு பதிந்து சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதன்படி சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) தினேஷ் கப்பலூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இந்து  முன்னணி வட்டார தலைவர் விஜய், அந்த இடத்தில் சிலை வைத்த வெற்றிச்செல்வன் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் குமரகுரு, பாஸ்கர், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த விநாயகர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு பழுவூர் விஸ்வநாதர் கோவிலில் வைக்கப்பட்டது.

Next Story