200 விநாயகர் சிலைகள் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் கரைப்பு
200 விநாயகர் சிலைகள் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் கரைப்பு
சேலம், செப்.11-
சேலத்தில் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்திய 200 விநாயகர் சிலைகள் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்கள் முன்பு விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்ததது. இதனால் பொதுமக்கள் சிறிய அளவிலான சிலைகளை கடைகளில் வாங்கிக்கொண்டு தங்களது வீடுகளில் வைத்து வழிபட்டனர்.
இதனிடையே, வீடுகளில் வைத்து வழிபாடு நடத்திய சிலைகளை பொதுமக்கள் அவர்களாகவே எடுத்து சென்று அருகில் உள்ள கோவில்களில் ஒப்படைக்கலாம் என்றும், அதேசமயம், ஊர்வலமாக செல்லாமல் தனிப்பட்ட முறையில் சிலைகளை அருகில் உள்ள ஏரிகளில் கரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சிலைகள் கரைப்பு
அதன்படி சேலம் மாநகரில் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று மாலை கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியில் கரைப்பதற்காக பொதுமக்கள் அங்கு எடுத்து சென்றனர். இதனால் அஸ்தம்பட்டியில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் சாலையில் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சிலர் விநாயகர் சிலைகளை எடுத்து சென்றதை காணமுடிந்தது.
இதையடுத்து மூக்கனேரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு ஏற்கனவே இருந்த மூக்கேனரி பராமரிப்பு ஊழியர்களிடம் பொதுமக்கள் தங்களது சிலைகளை ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சிலையாக ஏரியில் கரைக்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
Related Tags :
Next Story