விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 Sep 2021 8:22 PM GMT (Updated: 10 Sep 2021 8:22 PM GMT)

விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை

சேலம், செப்.11-
விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
வீடுகளில் சிலைகள்
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நேற்று பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். அதாவது, சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து, தேங்காய், பழம், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை ஆகியவை படையலிட்டு பூஜை செய்தனர். சேலம் மாநகரில் உள்ள பெரும்பாலான விநாயகர் கோவில்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ராஜகணபதி கோவில்
சேலம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் வழக்கம் போல் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.
பின்னர் ராஜகணபதிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடந்தது. ஆனால் கோவிலில் நடந்த பூஜை வெளியில் தெரியாதபடி திரை அமைக்கப்படடு இருந்தது. ஆனால் அபிஷேகம் மற்றும் அலங்காரம், பூஜைகள் அனைத்தும் யு-டியூப், பேஸ்புக் மூலமாக பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கோவில் முன்பு பக்தர்கள்
அதேநேரத்தில், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் திரளான பக்தர்கள் கோவில் முன்பு நின்று கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அப்போது, ஒருசில பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட பக்தர்களை சமாதானப்படுத்தினர்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள வனக்காளியம்மன் கோவிலில் உள்ள இரட்டை விநாயகருக்கு நேற்று பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சந்தனம் மற்றும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், மணக்காடு ராஜகணபதி நகரில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பூஜைகள்
ராஜாராம் நகரில் உள்ள தேவராஜகணபதி கோவில், ஜாகீர் அம்மாபாளையம் விநாயகர் கோவில், கோரிமேடு விநாயகர் கோவில், செவ்வாய்பேட்டை விநாயகர் கோவில், வின்சென்ட் பகுதியில் உள்ள விநாயகர் கோவில், அரிசிபாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் உள்பட மாநகர், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது.
ராஜ அலங்காரத்தில் விநாயகர்
காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் செல்வ விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதாவது, செல்வ விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேங்காய், மற்றும் பழ வகைகள், சுண்டல், சர்க்கரை பொங்கல், ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தலைவாசல் பகுதியில் வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.. பெரியேரி கிராமத்தில் இரட்டை பிள்ளையார் கோவில், ஆரகளூர் ராஜகணபதி கோவில், தலைவாசல் செல்வகணபதி கோவில், தலைவாசல் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கணபதிக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர்.
ஆட்டையாம்பட்டி
ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பைரோஜிமெயின் ரோடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி சுவாமிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் விசேஷ பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வீரபாண்டி அடுத்துள்ள அரியானூர் மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், வெள்ளி கவச அலங்காரமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story